Friday, October 27, 2023

இலகிமா (வ.தாராயோ..சிறுகதை-8)

 இலகிமா.

  இந்த விசித்திர ஆசாமியை அறிந்து  கொள்ளுங்கள். சராசரி உயரம். அழுக்கான மேற்சட்டை. தார்ப்பாய்ச்சிக்கட்டிய கிழிசலான கலர்ச் சாரம். பரட்டையான தலைமயிர். சிக்குப்பிடித்த தாடிமீசை.. மேலே போர்த்திய பச்சை நிற சீலைச்சால்வை. செருப்பு இல்லை. வயதை இலேசாகக் கணிப்பிட முடியாது.  உண்மைப் பெயர் யாருக்கும் தெரியாது. சிறுவர்கள் வைத்த பெயர் படங்காட்டப்பாபெரியவர்கள் கூப்பிட்ட பெயர் மஸ்தார் அப்பா. பரவலான பட்டப்பெயர் பைத்தியம்.

 

     இந்தப் பைத்தியத்திடம் தினசரி ஒரு வழக்கமிருந்தது. சரியாக காலை 10:45 க்கு நான் கற்க்கும் பாடசாலைக்;கு வரும்.  அந்நேரம் பாடசாலை இடைவேளையாக இருக்கும். பசிதான் காரணம். அந்நேரம் பிள்ளைகள் கல்லெறியும்.  பைத்தியம் அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாது. நான் பாவமென்று ஒரு பணிஸ் கொடுப்பதும்ää அது புகைப்பதற்கென்று ஒரு பிறிஸ்டல் சிகரெட் கொடுப்பதும்  வழக்கம்தான். அதனிடம் என்ன கேட்டாலும் நேரடியான ஒரு பதிலும் வராது. சம்பந்தாசம்பந்தமில்லாது ஏதோ புறுபுறுக்கும்.  பணிஸையும் வாய் திறந்து கேட்காது. கொடுத்தால் வாங்கிச் சாப்பிடும். இல்லாவிட்டால்ää பிள்ளைகள் பிய்த்து எறிவதைப் பொறுக்கிச் சாப்பிடும்.   மிக நிதானமாகச் சாப்பிட்டு முடிந்ததும்ää பிள்ளைகள் கூ..ய் ப்பாடு போடுவதையும் சட்டை செய்யாது.  பாடசாலை குழாய்த் தண்ணீரை வயிறு நிரம்பக் குடிக்கும்.  உடன்ää காதுகளில் சொருகப்பட்டிருக்கும் குறை பீடிகளில் ஒன்றை உருவி  எடுக்கும். அப்புறம் ஒரே புகை மண்டலம்தான். பின் திரும்பி கஸ்டப்படுத்திய பிள்ளைகளை உறுக்கி ஒரு பார்வை.  அப்புறம் சிறிதினும் சிறிதான ஒரு காய்ந்த சருகைப் பொறுக்கி எறியும். அதுவும் சும்மாதான். அப்புறம் விறுவிறுவென்று போய்விடும்.  இதன் பூர்வீகமும் யாருக்கும் தெரியாது.  சம்மாந்துறையில்தான் அதிகம் புழக்கம்.

     ஒரு வாரம் விடுமுறையிலிருந்த நான் அன்று பாடசாலை வந்ததும் என் வகுப்புப் பிள்ளைகள் ஒரு விசித்திரச் செய்தியைச் சொன்னார்கள். பைத்தியத்திற்கு யாரோ வேடிக்கைக்காக(?) அது குடிக்கும் தேனீருக்குள்  கிருமிநாசினி மருந்தையும் கலந்து கொடுத்து விட்டார்களாம்.  நல்ல வேளையாக பைத்தியம் சாகவில்லை.  ஆனால்ää மாற்றுமருந்து எதுவும் எடுக்கவுமில்லை.  இன்றும் இடைவேளையின் போதுää நான் அதைக்கண்ட போதுää நன்றாகக் கறுத்துப் போய் களைத்திருந்தது.  மிகப் பரிதாபமாகவிருந்தது.  யாருக்குமே தொல்லை தராத பைத்தியத்துக்குத் தொல்லை தரத்தான் எத்தனை மனிதர்கள்..! நான் வெளியே வந்து அதனை அருகே அழைத்தேன். தாமதமாகப் புரிந்து கொண்டு என்னருகே வந்தது. ஆடைகளின் நாற்றம் மூக்கைக் குடைந்;தது.

 

மஸ்தார் அப்பா..! உனக்கு யாரு நஞ்சு கலக்கித் தந்தார்கள்..?

 

..............................

 

யாரு..எந்தக் கடையில்..அல்லது யாரின் வீட்டில்.. அப்பா..?

 

..............................

 

ஆஸ்பத்திரிக்குப் போனதா..மருந்து எடுத்ததா..?

 

     எந்தப்பதிலும் இல்லை. எனக்கு ஆத்திரமாக இருந்தது. தலையில் ஓங்கிக் குட்ட வேண்டும் போலிருந்தது. கையில் பணிஸ{டன் ஒரு ஐம்பது ரூபாய்த் தாளும் எடுத்து கொடுத்தேன். 

 

இந்தக் காசிக்கி பிறிஸ்டல் வாங்கி அடிக்காம மருந்து எடுத்துக் குடிக்கனும் வெளங்கிச்சாப்பா..?

 

காசைச் சடக்கென வாங்கிச் சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டது. என்னை ஒரு தரம் நிதானமாக உறுத்துப் பார்த்தது. மெதுவாக முணுமுணுத்தது.

 

பிறிஸ்டல் காரம்.. சரியான காரம்.. நீää காரத்தை விடு..

 

பின்  விருட்டென்று வெளியேறிவிட்டது. எனக்குத் தாங்க முடியாத கோபம் வந்தது. யார் காரத்தை விடுவது.. நான் எப்போதாவதுதான் ஒரு சிகரெட் புகைப்பேன்.. நீதானே சதாவும் புகைக்கப்பல்.. காரத்தை நீ விடுவதா நான் விடுவதா.. எங்கே போகிறாய்.. யாருக்குப் படிப்பிக்கிறாய்....?  இதனை இப்படியே விடக் கூடாது    என்று நான் திடீர் முடிவெடுத்தேன். உடனே அதிபரிடம் சொல்லி விட்டுää நியாஸின் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன். பைத்தியத்தைக் காணவில்லை. எந்தப் பக்கம் போயிருக்கும்..?  ஹிஜ்ராச் சந்திப் பக்கமாகத்தான் போயிருக்கும்.  சைக்கிளை மிதித்து சந்திப்பக்கமாக வந்தேன். சந்தி சனப் புழக்கமாகவிருந்தது. மஸ்தாரைக் காணவேயில்லை. சனங்களிடம் கேட்கக் கூடாது. என்னiயும் வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்கி விட்டால்..என் ஆசிரியத் தொழிலே கேள்விக் குறியாகிவிடாதா..?  சைக்கிளை விட்டு இறங்கி தள்ளிக் கொண்டு யாரிடமும் விசாரிக்காமலேயே மெதுவாக நடந்தேன்.

 

     பண்டா கூல் ஸ்பொட்நியூ செலக்ஸன்வளையல்கடை- சிலிண்டர்கள்ஜவ்பர் டீ ரூம்! -இங்கேää சுவையான கட்லட்’ää கேக்வகைகள்..ää வெள்ளிதோறும்ää ஸ்பெஷல்  புரியாணி...யை மறைத்தபடி நின்று கொண்டுää பைத்தியம்  நின்ற நிலையிலேயே தேநீர் குடித்துக் கொண்டு பீடியும்புகைத்துக் கொண்டிருந்தது.  கழுவப்படாதää ஒரு பழைய வெற்றுப் பால் குவளைக்குள்தான் கடைக்காரன் தேநீர் கொடுத்திருந்தான். நான் கடைக்கண்ணால் இவற்றைக் கவனித்தபடியே தேநீர் கடைக்குள் விரைவாக நுழைந்தேன். கடைக்காரன் முதலில் எனக்கு சுடச்சுட ஒரு புன்னகையை ஊற்றிக் கொடுத்து விட்டுää பைத்தியத்தை துரத்துவதிலேயே குறியாயிருந்தான்.  ஆனால்ää மஸ்தாரோ அதனை அலட்சியப்படுத்திää மிக ஆறுதலாக  தேநீரை  ஊதிஊதிக் குடித்துக் கொண்டிருந்தது. பின் பால் குவளையைத் தரையில் வைத்தது.

 

ஏய். மஸ்தாரு அப்போ.. பால்டின்னை அங்கால வெய்.  ஊத்த.. நல்லபெரிய ஆக்கள் வாரபோற எடம்..

 

திரும்பி எனது ஆமோதிப்பை எதிர்பார்த்து மறுபடி ஒரு புன்னகை ஊற்றல். மறுபடிää மஸ்தாரை நோக்கிää

 

மஸ்தார் அப்போய்.! இனி ஞ்சாலப்பக்கம் வெராத.. ஊத்தட நாத்தம் வவ்த்தப் பொரட்டுது..

 

     மஸ்தார் என்னையோää கடைக்காரனையோ ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.  கடைக்காரன் ஒரு பிறிஸ்டல் சிகரெட்டை எடுத்து மஸ்தாரின் கைகளில் பட்டும்படாமலும் அருவெறுப்புடன் போட்டான்.  கடையில் தொங்கிய கயிற்றுச் சுரணையில் அதனைக் கொளுத்தியது. புகை குப்புக்குப்பெனப் பரவää சட்டைப்பைக்குள் கை விட்டுää (நான் கொடுத்த) ஐம்பது ரூபாய்த்தாளை எடுத்துக் கல்லாவில் போட்டது. சட்டென ஓரளவு சத்தமாகää

 

பிறிஸ்டலும் காரம் கூட..! டீயும் சீனி கூட..!  நீää காரத்தை விட்டால் சரி..  என்று முணுமுணுத்தது. 

 

ஆரு..மய்த்தார் அப்பா.. நீதான் காரமான வீடியும்ää சுருட்டும்ää சிக்கிரட்டும் ஒரமாக் குடிச்சித் தள்றாய். நீ மொதல்ல காரத்த உடு..

 

என்று சிரித்தபடியேää கடைக்காரன் ஒரு நெருப்புக் குச்சியால் அந்தக் காசை தனது கல்லாப்பெட்டிக்குள் தள்ளிவிட்டுää  மிகுதிப் பணம் கொடுக்..க  முன்னரே பைத்தியம் நகர்ந்துவிட்டது. உண்மை என்னவென்றால்ää மிகுதிக் காசை கடைக்காரன் கொடுக்காமல் வேண்டுமென்றே தாமதித்தான் என்று தோன்றியது. எனக்கு அவன் மீது ஆத்திரம் வந்தது.

 

ந்த மாதிரிப் பைத்தியங்களுக்கு மிகுதிக் காசு கொடுக்கவே கூடாது நீ செய்ததே சரி. என்றேன்  வெகு நக்கலான தொனியில்..

 

கடைக்கரன் என்னைத் திடீர் அன்பொழுகப் பார்த்தான். என் குரலிலிருந்த கோபத்தை அவதானித்தானோ என்னவோ..ஒரு சமாளிப்புக்காகச் சொன்னான்.

 

ல்ல மாஸ்டர்ää பவ்டி என்னன்டால்ää மஸ்தாருஅப்பா மிச்சக் காசக் குடுத்தாலும் வாங்கமாட்டாரு..

 

ஏன் அப்படி.. யாராவது காசு கொடுத்தா வாங்கிறவர்தானே..?

 

எனக்கித் தெரியாப்பா.. ஆனாää அந்தாள் அப்பிடித்தான்.  மிச்சக் காசி கேட்கிறதுமில்ல.. காசி ல்லாட்டியும் என்ட கடைக்கி டெய்லி வந்து  டீயும் சிக்கிரட்டும்  குடிக்கிற காசே தெரணும் ஒரு எண்ணுத்திச் சொச்சம் ரூவா. அதிலரிந்து மிச்சக் காசக் கேக்கிறல்ல சேர்..இந்தாளு..

      

மஸ்தாருஅப்பா  கதக்கிற ல்லியா  உன்னோட..? 

 

எப்பயாச்சிம் ரெண்டொரு கத..

 

என்ன மாதிரிக் கத..?

        

வெளங்கறயில்ல எனக்கி.. ப்ப கதச்ச  மாதுரிää  ஒரு சாதி ஜானக் கத.

 

ஜானக் கத..யானைக்கதையா..?

 

ல்ல மாஸ்டர்.. இந்த சாமிää அவ்லியா மாதிரி  ஒருசாதி தத்துவக்கத

 

ஐஸீ.. ஞானக் கதைகள்..

 

அதான்..அதான்.. சேர் டீயைக் குடிங்க..

 

குடிச்சிட்டன். டீ நெல்லாப் போட்டிருக்கு. மஸ்தாருடைய தாய்தகப்பன் யாரு.. சொந்த ஊரு எது..?

 

அதெல்லாம் தெரியா சேர்.. நான் சின்னப் புள்ளயா இருந்தே இந்தாளக் கண்டிருக்கன். அப்பயும் இப்பிடித்தான். ஆனாää ஆள் கடும் ஆளாம் சேர்.. கொதறத்தெல்லாம் (அற்புதங்கள்.) காட்டுவாராம் ண்டு எங்குட வாப்பா செல்லிரிக்காரு.. ஒருக்கா ஊருல வானம் பொளச்சி மள ல்லாம இருந்த டைமுல இந்த மஸ்தாருதான் மள பேய வெச்சதாம். எங்கட எம்.பி.ட   தீராத  வவ்த்து நசலலுக்கு மண்ணத் திங்கக் குடுத்து சொகமாக்கினயாம்.. ப்பிடிக் கத கொள்ளயா செல்லுவாஹ.. சேர்..

 

அட..!

 

அதுமட்டுமில்ல சேர்.. இந்த ஒருஆளே ரெண்டு மூணு எடத்துல ஒரே டைமுலயும் இரிப்பாராம்.

 

ச்சே.. இருக்காது.  அதெல்லாம் சும்மா கப்ஸா அடிப்பாங்க..

 

சம்சா அடிக்க கொஞ்சம் சொணங்கும் சேர்.. ஸ்கூலுக்கு குடுத்து அனுப்பயா மாஸ்டர்..?  ந்தாங்க சேர்! மிச்சக்  காசி...

 

     பைத்தியத்தின் பின்னணி நான் ஊகித்தது போலவே ஓரளவு இருந்தது.  அதன் போக்கும் நடத்தைளும் ஒரு மாதிரியாகப் புரிந்தது. சித்தர்களாக அறியப்படும் இந்த அவ்லியாக்கள் பற்றி நான் வாசித்தும்  கேள்விப்பட்டுமிருந்த  பற்பலச் சேதிகள் என் ஞாபகத்தில் வந்தன.  அதனால் இக்கதைகள் பற்றிய நம்பகத்தன்மை எவ்வாறிருக்கும் என அறிவேன். ஆனால்ää இதனை என் வாழ்வின் நடைமுறையில் பார்த்தேவிடுவது என நான் உடனே தீர்மானித்தேன். பித்தனே  உண்மையில் நீ யார்..?  சித்தனா..புத்தனா..?

 

()

    

இன்றும் வழமை போல பைத்தியம்  பாடசாலைக்கு வந்திருந்தது.  பிள்ளகைள் புடை சூழ  துண்டு பணிஸ்களை பொறுக்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. பிள்ளைகளின் எந்த ஒரு துடினங்களையும் பொறுத்துக் கொண்டு சும்மா  மரத்தினடியில் இருந்து சாப்பிட்டது. ஓய்வுமுடிவு மணி அடித்ததும் நான் பிள்ளைகளைத் துரத்தி விட்டுää பைத்தியத்தை நெருங்கினேன். அழுக்கு முடைநாற்றமடித்தது. ஏற்கனவே தயாராகக் கொணர்ந்திருந்தää இரண்டு ரொட்டிகள்ää ஒரு பிறிஸ்டல் பக்கட்ää சில அண்டிபொய்ஸனிங் குளிசைகள்ää சில விட்டமின் மாத்திரைகள்அடங்கிய  பார்சலை ஓரளவு தயக்கமாகவே அதனிடம் நீட்டினேன். இப்போது நானும் பைத்தியமும் தனியாகவே நின்றோம். என் பார்சலை சடக்கென்று வாங்கிக் கொண்டது. பரபரபென்று பிரித்தது. ரொட்டிகளைச் சாப்பிடாமல் ஊத்தைச் சாரனுக்குள் சுருட்டி வைத்தது.  பின்ää முதற்காரியமாக சிகரெட் பக்கட்டை பிரித்து ஒன்றை வெளியே இழுத்துக் கொளுத்தியது  பகபகபகவெனக் காரமான  புகை நான் மூக்கைப் பொத்திக் கொண்டேன். பின்னர் குளிசைகளை எடுத்தது. கையில் சும்மா வைத்திருந்தது. பின் சட்டென இடத்தைவிட்டு நகர்ந்தது.  நான் விடவில்லை. சற்றுத் துணிவாக உரத்துக் கூப்பிட்டேன்.

 

மஸ்தார் அப்பா..! 

 

என் குரலுக்குச்  சடக்கென்று நின்று விட்டது.  திரும்பி என்னைப் பார்த்தது. கண்களில் உணர்ச்சி ஏதும் இல்லாவிட்டாலும் நிச்சயம் கேள்வி இருந்தது. நான் சந்தர்ப்பத்தை விடாமல்ää

 

அப்பா..! உங்களுட்ட ஒரு கேள்வி கேக்கனும் நான்.. அதுக்கு மொதல்ல இந்தக் குளிசைகள ஒவ்வொரு நாளும் மூன்று நேரமும்  விழுங்கணும்.  உடம்பில இருக்கிற விசத்துக்கு இது நெல்லது. விளங்குதா..சரிää நான் கேட்க வந்தது என்னவென்றால்ää இலகிமா என்றால் என்ன அப்பா..?

 

என் கேள்விக்கு எவ்விதமான பதிலுணர்வும் காட்டாத பைத்தியம் தனது அடுத்த சிகரெட்டைக் கொளுத்தியது. பின் போகத் திரும்பியது. நானும் பிள்ளகைள் வகுப்பறையிலிருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் சட்டை செய்யாது பைத்தியத்தின் முன்னால்ää விரைவாக வந்து மறித்துக் கொண்டு.

 

மஸ்தார்அப்பா..! நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில்...?என்றேன். பைத்தியம் வேண்டாவெறுப்பாக என்னபைபார்த்துவிட்டுää சற்றுத் தயங்கி நின்று வேறு எங்கோ பார்த்தது. நான்  விடாக்கண்டனாக  மறுபடியும்ää கேட்டேன்.

 

மஸ்தாரு அப்பா..!  இலகிமா எப்படி என்றுகாட்ட முடியுமா எனக்கு...?

 

......................................

 

பதில் வரவில்லை. பைத்தியம் என்ன இழவுடா இது என்ற பாவனையில் நின்றது. பைத்தியத்தின் கண்களில் என் கேள்வி வியப்பை வரவழைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன்.  அதுää எவ்விதமான பதிலுணர்வும் காட்டாதுää முன்னோக்கி நகர ஆரம்பித்தது.  உடன்ää சடக்கென்றுää நான் திடுக்கும் படியாக ஒரு காரியம் செய்தது. நான் கொடுத்திருந்த அந்த மொத்தம் பதினாறு குளிசைகளையும் சட்டென்று அப்படியே ஒரே தடவையில் வாய்க்குள் போட்டுää கடுக்குக்கடுக்கென்று கடித்துச் சப்பிச் சாப்பிட்டு விட்டது. நான் பதறிப் போய்.. அடப் பைத்தியமே.. எல்லாத்தையும் சாப்பிட்டே விட்டாயா..ää”என்று பதறிப் போய்க் கேட்டேன். பைத்தியம் திடீரெனச் சத்தமிட்டுச் சிரித்தது. குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது. கண்களில் தண்ணீர் வருமளவும் சிரித்தது. பின்ää சத்தமாக என்னை நோக்கி ஒரு பதில் சொன்னது.

 

நீää  காரம் கூட..  மொதல்ல   நீää காரத்தை விடு..!

 

இவ்வளவுதான் அந்தப் பதில்.! அதற்கு மேல் பைத்தியம் அங்கு நிற்கவில்லை.  விடுவிடுவென்று போய்விட்டது.  நான் ஆச்சரியமும்ää குளிசைகளின் பயத்திலும் அதனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

 

      வகுப்பு மொனிட்டர் நியாஸ்ää  வந்து கூப்பிட்டதும் உணர்வு பெற்று வகுப்பறைக்குத் திரும்பி வந்தேன்.  படிப்பிக்க மனது ஈடுபடாதிருந்தது. மூளை முழுவதும்  பைத்தியத்தின் பதிலே சுற்றிச் சுழன்றது. இலகிமா என்றால் என்னவென்று கேட்டேன். கிடைத்த பதில்ää நீ காரம் கூட.. என்ன இது.. அல்லது நான்தான் போட்டுக் குழப்பிக் கொண்டு குழம்புகின்றேனா.. மெத்தப்படித்த தமிழ் மெய்ஞானிகளிடம் கேட்க வேண்டிய கேள்வியை சாதாரண ஒரு பைத்தியத்திடம் கேட்டால் ..?  உண்மையில் பைத்தியம் மஸ்தாருக்கா..?ää எனக்கா..?

 

ஸேர்ää  ஐதரசன் குளொரைட்டு காரமா.. அமிலமா சேர்..ர்?

 

நீ காரம் கூட.!

 

சட்டெனப் பிள்ளைகள் சிரிக்கவேää வெட்கப்பட்டு பாடத்தில் கவனத்தைத் திருப்பினேன். ச்சே.. இங்கும் காரம்தானா..?  பைத்தியம் தற்சமயம் எனக்குத்தான் என்று சந்தேகமறப் புரியவேää படிப்பித்தலை நிறுத்திää அரை நாள் விடுப்பில் என்  விடுதி அறைக்குத் திரும்பி விட்டேன்.

 

      பசிக்கவில்லை. காரணமின்றி நெஞ்சமெல்லாம் பரபரத்தது.  நிம்மதியாகவேயில்லை.  குழப்பமான எண்ணஙகள்.. ஒரு பைத்தியம் என்னை அவமானப்படுத்தி விட்டதா?  ஏனிந்த சின்ன விடயத்தைப் போட்டுக் குழப்புகிறேன்..மஸ்தார் அவ்லியாப் போர்வையிலுள்ள பைத்தியமா..அல்லது பைத்தியப் போர்வையிலுள்ள அவ்லியாவா..?  இரண்டிலொன்றைச் சோதித்தே பார்த்துவிடுவது என்று  திட்டமாய்த் தீர்மானித்தேன். சட்டென்று மனம் இலேசாகி விட்டதைப் போலிருந்தது. சரி.. மூலையில் மண்குடத்திலிருந்த நீரைப் பருகியதும் மனம் மேலும் தெளிவடைந்தது. திடீர் உற்சாகம் வந்தது. ஆம்.. கணக்கைத் தெளிவாகத் தீர்த்தல் என்ற முடிவில்  நிதானம் சமநிலைப்பட்டேன்.

 

      உடனேää மேசை மீது உட்கார்ந்து எனது சோதனைத் திட்டங்களை குறிப்புப் படுத்த ஆரம்பித்தேன். ஏ.. இது ஓரளவு அபாயமான விசயம் என்று நான் அறிந்திருந்தும்ää மஸ்தாரே.. நீ ஒரிஜினலா.. டூப்ளிக்கேட்டா.. என்றறியும் வரை விடமாட்டேன்.. நான் வரைந்த திட்டங்களும்ää அதற்கான தேடல்களும் அநேகம். இவ்விடயம் பற்றி எனக்கு எடுத்துரைத்த என் பழைய ஆசிரியர்களானää பாணடிருப்பு சிறிஸ்கந்தராசா அதிபருக்கும்ää  காத்தான்குடி அஸ்ஸெய்க். அப்துல்கப10ர் பூவி ஆசிரியருக்கும் தொலைபேசி மூலமாகப் பேசி சில அறிவுரைகள் பெற்றிருந்தேன். எல்லாம் விபரமாகச் சொல்ல முடியாவிட்டாலும்ää ஒரு வாரத்தில் என் திட்ட வரைபு பெரும்பாலும் ப10ர்த்தியாகியிருந்தது.  திட்டத்தில் எனக்கே ஒரு திருப்தி ஏற்பட்டிருந்தது. இனி நான் ஒரு நாளைத் தீர்மானிக்க வேண்டியதுதான் பாக்கியிருந்தது. அதையம் உத்தேசமாக தீர்மானித்தே வைத்திருந்தேன். மஸ்தாரே.. நமக்கிடையேயான இந்தப் போராட்டத்தில் உனது பதில் என்ன..பார்க்கலாம்.. பரீட்சைக்களத்துக்கான நாள் வரும்வரை நான் வழமை போல படிப்பித்துக் கொண்டிருந்தேன். பைத்தியமும் தினமும் பாடசாலைக்கு வந்த போய்க் கொண்டேயிருந்தது. நான் அதனிடம் ஒன்றும் பேசுவதுமில்லை. நேருக்குநேர் சந்திப்பதுமில்லை என்று விலகியே இருந்தேன். ஏனெனில்ää இதனை எங்கு எப்போது எப்படிச் சந்திப்பதென்று எனக்குள் மட்டும் நானே தனிப்படத் தீர்மானித்திருந்தேன்.  என் ஆலோசகர்களிடம் கூட நான் அந்த நாளைச் சொல்லவில்லை. அந்த நாளும் நெருங்கியது. 

                              ()

 

இன்றைக்குப் பொழுது விடிந்ததும் பரபரப்புடன் எழுந்தேன். வெள்ளிக்கிழமை. இன்று விடுமுறை எடுத்திருந்தேன். என்னுடைய திட்டம் மிகவும் சுலபமானதுதான். பரபரப்புடன் எழுந்தாலும்ää மிகவும் நிதானமாகச் செயற்பட்டேன். முதலில் எனது ஆலோசகர்கள் இருவரையும் காலை எட்டு மணிக்குத் தொலைபேசியில்ää தொடர்பு கொண்டேன். சிற்சில இறுதி அறிவுறுத்தல்கள் பெற்றேன். அவர்கள் கூறிய சில ஆகம நடைமுறைகளையும் நிறைவேற்றினேன். நான் தயாரானேன். நிதானமாக உட்கார்ந்து மனதில் ஒரு எண்ணமுமில்லாது  கலைத்து விட்டுää முழுமன ஈடுபாட்டுடன்ää ஒரு பேப்பரில் எழுதினேன். முதலாவது இடம்ää பாண்டிருப்பு சிறிஸ்கந்தராசா அதிபர் வீடு. காலை 10:45.  இரண்டாவது இடம்ää காத்தான்குடி மௌலவி. அப்துல்கப10ர் பூவி. காலை 10:45. மூன்றாவது இடம்ää சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம். நியாஸ். காலை 10:45. நான்காவது இடம்ää மாவடிப்பள்ளி சின்னப்பாலம். நான். காலை 10:45. பாடசாலையிலிருந்து சின்னப்பாலம்ää ஏழு மைல்கள்.. பாண்டிருப்பு இதிலிருந்து தெற்காக ஆறு மைல்கள்ää அதன் வடக்கேää இருபது மைல்களுக்கப்பால்ää காத்தான்குடி.. ஒரே நேரத்தில்ää 10:45க்கு இங்கேயா..அங்கேயா..நீ சித்தனா..வெறும் பித்தனா..பார்ப்போம். இவ்வளவுதான் என் விபரம். இறுதியாக எழுந்து நின்று மனதை ஒருநிலைப்படுத்தித் தன்னந்தனிமையாகச் சூழுரைத்தேன்.

 

ஹே..! மஸ்தார் அப்பா..ää நீ ஒரு உண்மையான இறைநேசராக இருந்தால் இந்த நான்கு இடங்களிலும் இலகிமாவை எனக்குக் காட்ட வேண்டும்.

 

அவ்வளவுதான். இனி பரிசோதனைக் களம்தான். மணியைப் பார்த்தேன். காலை 9:39. ஓ..! நேரம் இருக்கிறது. சைக்கிளை எடுத்தேன்.  சம்மாந்துறையிலிருந்து கல்முனைக்குச் செல்லும் நெடுஞ்சாலையில்ää  வீதியின் குறுக்கேää ஒரு மரப்பாலம் இருந்தது. கீழே சலசலவென்று தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். சன நடமாட்டம் பெரும்பாலும் இருக்காது. இதனை சின்னப்பாலம் என்பார்கள். இந்தப் பாலம்தான் எனது இலக்கு. சரிதான்.. ஆறுதலாகவே மிதிக்கலாம். இன்னும் ஒன்றேகால் மணித்தியாலயங்கள்இருக்கின்றன.  ஐசக்கிளைக் கால்கள் சைக்கிளை உளத்திக் கொண்டிருநதன. உள்ளேää எண்ணங்கள் கொதித்துக் கொண்டிருந்தன. பூமரச் சந்தியால்ää திரும்பிய போதுää தூரத்தே சின்னதாகப் பாலம் தெரிந்தது. பாலம் நெருங்க நெருங்க என் தைரியம் மெதுமெதுவாகக் கரைய ஆரம்பித்தது. சற்று திடுக்கீட்டுணர்ச்சியாகவிருந்தது. வயிற்றினுள் ஆரம்பித்த பய உணர்வு மனது வரை பரவியது. வீண்வேலைகளில் ஈடுபடுகிறோமோ.. மணி 10.17. 

 

சிலவேளைகளில் இது பொய்யாகி விட்டால்ää அதிலொன்றும் கவலையில்லை. மாறாக நிம்மதியாகவிருக்கும். பொய் என்று விட்டுப் போய்விடலாம்.. ஆனால்ää இது உண்மையாயிருந்து விட்டால்தான் என் முயற்சியின் விபரீதம் வெளிப்பட ஆரம்பிக்கும். சிலசமயம் உண்மையாகவிருந்து எனக்கு மட்டும் வெளிப்படாமலேயே போயும் விடலாம்.  அது கூடப் பரவாயில்லை. என்ன இது.. மறுபடி குழம்புகின்றேனா..இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லi. இப்படியே திரும்பி விடலாம். மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம்.. ச்சேää இது எல்லோருக்கும் கிடைப்பதுமில்லை.  சித்தர்களுக்குச் சோதனை வைப்பவர்கள் உருப்பட்டதுமில்லை. இம்மாதிரியான முயற்சிகளில்ää ஈடுபடத் தேவையான மனபலமும்ää தீரமும்ää ஆத்மீக ஒழுக்கமும் இருந்தும் நான் அதில் பின்வாங்குவேனா..அலைக்களித்த எண்ணங்களை இறுதியாக விரட்டிவிட்டுää பாலத்தை அடைந்தே விட்டேன். 10.40.

 

இப்போது பாலத்தின் மத்தியில் நின்றேன். சைக்கிளை விட்டும் இறங்கவில்லை. நீரில் தோய்ந்த குளிர்காற்று குளுகுளுவென்று வீசிக் கொண்டிருந்தது. சிற்சில விசித்திரப் பறவைகள் துள்ளிக் கீச்சிட்டன. சன நடமாட்டம் கண்ணுக்கெட்டியவரை தென்படவில்லை. தூரத்தே வயலுக்குள் ஒரு உழவு இயந்திரம் சூடடித்துச் சுழன்று கொண்டிருந்தது. சில தொழிலாளர்கள் தெரிந்தனர். வீதியில் யாருமில்லை. தூரத்தே ஒரு மினிவான் வந்து கொண்டிருந்தது. 10.42. வாகனம் கடந்த போதுää பாலம் தடதடத்தது. நான்ää சைக்கிளில் அமர்ந்திருந்தேன். மணியை என் கண்கள் பயத்துடன் பார்த்தன. நெஞ்சு ஒருகணம் துணுக்குற்றது. 1045. இந்நேரம் பாடசாலையில் இடைவேளை மணி ஒலிக்கும். காத்தான்குடியில் மௌலவியின் பலசரக்குக்கடை திறந்திருக்கும். பாண்டிருப்பில் சிறிஸ்கந்தராசா அதிபர் வீட்டில் தயாராக முன்விறாந்தையிலிருப்பார். நான்?  இங்கே.. பாலத்தில்..?  பாலத்தில்..! திடீரென என் முள்ளந்தண்டு சில்லிட்டது.  உள்ளச்சத்தில் மனது திடுக்கிட்டது.

 

பாலத்தின் மறுகரையில்ää என் கண்ணெதிரிலேயேää அழுக்கான மேற்சட்டைää தார்ப்பாய்ச்சிக்கட்டிய கிழிசலான கலர்ச் சாரம்ää பரட்டையான தலைமயிர்ää சிக்குப்பிடித்த தாடிமீசை.. மேலே போர்த்திய பச்சை நிற சீலைச்சால்வைää செருப்பு இல்லாமல்அதே பைத்தியம்.! வேர்க்க விறுவிறுக்க நடந்து வந்து கொண்டிருந்தது. 

 

~ஆ..!நான் நடுக்கமுற்றுச் சட்டென்று சைக்கிளை விட்டும் கீழே குதித்து விட்டேன்.  மரப்பாலத்தையும்ää சைக்கிளையும் இறுகப்பிடித்துக் கொண்டேன்.. கால்கள் நடுநடுங்கின.. உதடுகள் காய்ந்து விட்டன.. கத்துவதற்குத் திராணியற்றுப் போய் வெறும் வாயைப் பிளந்து கொண்டிருந்னேன். கண்களிரண்டும்ää அவரின் மீதே குத்திட்டு நின்றன. என் விழிகளைப் பெயர்க்க முடியவில்லை.

 

அந்த மஹா வல்லமையின் ஆச்சரியத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.  பைத்தியம் (?) என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. என்னைத் திரும்பியும் பார்க்கவில்லை. அதன்பாட்டுக்கு அது பாலத்தைக் கடந்து போய்க் கொண்டிருந்துது. கூப்பிட வாயெடுத்தேன். துணிவும் வரவில்லை. வாயும் ஒத்துழைக்கவில்லை. சைக்கிளை அப்படியே கீழே விட்டுவிட்டுத் தரையில் அமர்ந்து கொண்டேன்.  பாலத்தின் கீழ் கைக்கெட்டும் தூரத்தில்ää தண்ணீர் அள்ளிக் குடித்தேன். முகத்தையும் நன்றாகத் துடைத்துக் கழுவி விட்டேன்.  பதினைந்து  நிமிடங்களின் பின் மெதுவாக எழுந்திருந்னேன். நான் எந்தத் தீர்மானத்திற்கும் வரவிரும்பவில்லை.  ஒரு மஹாவல்லமையின்ää  அணுவினுக்குமணுவான ஒரு துகள்ச் சக்தியின் பிரமாண்டமான பரினாமத்தின் நினைப்பில் என் மூளை விறைத்திருந்தது.  அனிமா..ää மகிமா..ää கரிமா..ää இலகிமா..ää பிரார்த்தி..ää பிரகாமியம்..ää ஈசத்துவம்..ää வசித்துவம்..ää அட்டமாசித்திகளில்  நான்காவது படிதான் இலகிமா. காற்றைவிடவும் இலகுவாகி மிக விரைவில் பரந்துää நினைத்த இடங்களில் சஞ்சரிக்கும் ஆற்றல் பெற்ற சித்தர்கள்ää அவ்லியாக்கள் எனப்படும் மஹான்களின் நினைவில் என் மனம் கட்டுண்டு போய் எதையும் நினைக்கவோää தீர்மானிக்கவோ முடியவில்லை.

ஒரு சிகரெட்டைப் புகைத்தேன்.  நான் சாதாரணமாகப் புகைப்பதில்லை. என்றாலும் இப்போது புகைக்க வேண்டும் போலிருந்தது. கொஞ்ச நேரத்தில் சற்று நிதானப்பட்டேன். மணி 11.10 ஆகவிருந்தது. இனி எனக்கு இங்கு ஒரு வேலையுமில்லை. போக எழுந்தேன். வயலுக்குள்ளிருந்து  உழவுஇயந்திரப் பெட்டி வந்தது. அதில்ää சைக்கிளைத் தூக்கிப் போட்டேன். தடதடத்துää குலுகுலுங்கிப் பாடசாலைக்கே வந்து சேர்ந்த போது மணி 11.40. அச்சமயம் இடைவேளை முடிந்து ஐந்தாம் பாட வேளையாகவிருந்தது.

 

நான் பேசாமல்ää நேராக என் வகுப்பறைக்கே சென்று உட்கார்ந்தேன். பிள்ளைகள் அவர்கள் பாட்டில் சும்மா சளசளத்தக் கொண்டிருந்தனர். நான் மொனிட்டர் நியாஸை அழைத்தேன். என் கட்டளைப்படி நான் கொடுத்திருந்த அட்டவணையை  அவன் தவறாது குறித்திருந்தான். அதனைப் பார்வையிட்டேன். திடீரென மனம் மறுடிபடி துணுக்குற்றது. மணி 10:44. இடைவேளை மணி ஒலி;த்தது. 10:45. பைத்தியம் பாடசாலைக் கேற்றில். 10:46. பைத்தியம் பணிஸ் சாப்பிடுதல். 10:50. பைத்தியம் தண்ணீர் குடித்தது. 11:10 பைத்தியம் போய்விட்டது.

 

நியாஸ்..! பைத்தியம் போகும் போது ஏதும் சொல்லிச்சுதா..என்று கேட்டேன்.

 

ஓம் சேர்..! போகேக்க பீடி ஒண்டைப் பத்த வெச்சிட்டுää என்னவோ முணுமுணுத்த படி போய்ச்சுது சேர். ஏதோ காரம் காரம்!  ண்டு ஏதோ கேட்டிச்சு எனக்கு..

 

சரி நீ போ.!

 

நான் மௌனமானேன். உண்மையில் நான்தான் தோற்றுப்போனேன்.

 

சேர்..! உங்களுக்கு டெலிபோன் வந்திருக்கு..

 

பரப்பாக எழுந்து அதிபரின் அறைக்குச் சென்ன்றேன். அதிபர்  ஒலிவாங்கியை என்னிடம் தந்தார்.

 

ஹலோää மௌலவியா..என் குரல் பாதாளத்திலிருந்து ஒலித்தது போலிருந்தது.

 

ஆமாம்ää நீங்க சொன்ன மாதிரியாக ஒரு பிச்சைக்கார மஸ்தாரு இங்கே கடைக்கு பத்தே முக்காலுக்குச் சரியாக வந்திருந்தாரு.

 

ஏதும் சொன்னாரா..? நான் அதிர்ந்து போய்க் கேட்டேன்.

 

ஆமாம்.. கடுகு இருக்கிறதா என்று கேட்டார். இருக்கிறது என்றேன். கடுகும் காரம். அதை விட நீ காரம்.. என்று  சும்மா சும்மா திருப்பிச் திருப்பிச் சொல்லிவிட்டு  சட்டென்று போய்விட்டார். அங்கே எப்படி..?

 

நான் பிறகு விபரமாகப் பேசுகிறேன் மௌலவி.. வைக்கிறேன்…”    ஒலிவாங்கியை வைத்துவிட்டேன். நற்றுத் தாமதித்து நின்றேன். அடுத்தகணத்தில்ää நான் எதிர்பார்த்த அடுத்த  அழைப்பும் வந்து விட்டது. இது பாண்டிருப்பு சிறிஸ்கந்தராசா அதிபரிடமிருந்துதான்.

 

ஹெலோ.. சிறீஸ்அதிபர் சேரா..?

 

ஆமாää தம்பி.. மாஸ்டரா ..சரிதான் நீங்க அடையாளம் சொன்னபிரகாரம் இங்கே என் வீட்டுக்கு  சரியாக பத்து நாற்பத்தைந்துக்கு ஒருவர் பி;ச்சைக்கு வந்தார். கையில் பனிஸ் வைத்திருந்தார். என்னிடம் ஒன்றும் அவர் கேட்கவில்லை. சும்மா வாசலில் நின்று ஏதோ முனுமுனுத்துக் கொண்டிருந்தார். ஐயாவுக்கு ஏதும் தேவையுளதா எனக் கேட்டேன். ஆனால்ää அவரோää நீ காரத்தை விட்டால்தான் உருப்படுவாய். என்று சொல்லியபடியே விறுவிறுவென்று போய்விட்டாரப்பா.. ஆசாமி யார்..?  கதிர்காமக்கதிர்வேலன்தானே..?

 

நான் பிறகு கதைக்கிறேன் ஐயா..

 

தொலைபேசியை வைத்துவிட்டு என் அறைக்குத் திரும்பி விட்டேன். என் மனம் வெற்றிடமாகியிருந்தது. உடம்பும் அதிகமாகக் களைத்திருந்தது. இனித்தான் எனக்கு சிரமங்கள் உள்ளன என்று மனம் சொன்னது. நீää காரம் கூட..!  நீää காரம் கூட..!   ச்சேää எதையும் நினைக்க விரும்பாமல்ää  நன்றாகக் குளித்தேன். சாப்பிடாமலே படுத்துவிட்டேன். 

                              ()

 

நீää காரம்! என்பதன்ää சரியான சொல்ää நீகாரம்" என்பதாகும். இதன் பொருள் ஆணவ மலம். அதாவதுää  ஓவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்ற நான் என்ற  அகங்காரம் இந்த நீகாரத்தை விட்டவன் வெற்றியடைவான். இது எனக்குப் புரிந்த போதுää நான்;ää என் சொந்த ஊரில் முப்பத்தெட்டு வருடம் சேவையாற்றி விட்டு ஐம்பத்தெட்டு வயது நிரம்பிய ஓய்வு பெற்ற அதிபராகவிருந்தேன். 13தினக்குரல். 1999.4