சாந்தி..ஓம் சாந்தி
சலீம் ஓர் ஆசிரியராக இருந்தாலும் மிகவும் குழந்தை மனத்தினன். மனைவியால் ஏற்பட்ட இந்தப் பிரச்சினையைத் தாங்குவது மிகச் சிரமமான ஒன்றாகத்தானிருந்தது. சலீம், பாயிஷா தம்பதிகளுக்கு இரண்டு வருடங்களின் பின்னர் சென்ற வாரமே முதற் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை. சலீமைப் போலவே சுருள் முடி. நிறமும் முகமும் பாயிஷாவின் சாயல். பெண் குழந்தை என்றதுமே சலீம் மனமகிழ்ந்தான். இயற்கையாகவே பெண் குழந்தையை விரும்பினான். மனைவி ஆண் குழந்தையை எதிர்பார்த்து நீல நிறத்தில் சட்டைகளும் நுளம்பு வலையும் தலை உறைகளும் தயாரித்திருந்தாள். சற்று ஏமாற்றந்தான். எனினும் தன் குழந்தை தன் உதிரம், தன் உதரம் என்று மகிழ்ந்தாள். முதலில் பெண் குழந்தைதான் 'பரகத்'தென்று விதவை மாமி சொல்லியிருக்கிறாள்.
குழந்தைக்கு பெயர் வைக்கத் தொடங்கையில்தான் பிரச்சினை ஆரம்பித்தது. மனைவியின் மனச்சேகரிப்புகளிலிருந்த ஆண் குழந்தைப் பெயர்கள் காலாவதியாகின. அவன் ஏற்கனவே ஒரு பெண் குழந்தைப் பெயர் தெரிவு செய்திருந்தான். ஆயினும் மனைவி பழைய ஈரான், ஈராக் புத்தகங்களை கண்களால் உழுது கொண்டிருந்தாள். இந்தப் பெயர் நல்லதா ........ அது நல்லதா? இப்படி வைத்தால் என்ன என்று துளைத்தெடுக்க ஆரம்பித்தாள். இவனுக்கு பொறுமை எல்லை கடந்தது.
“பாயிஷா, இஞ்சப் பாருங்க. பிள்ளக்கி நான் பேரு ‘செலக்ட்’ பண்ணிட்டன். நீங்க தேட வேணாம்”. அவள் ஆர்வமானாள். “என்ன பேரு ......... சொல்லுங்க”. இவன் ஒரு வினாடிதான் தயங்கினான். பின் சொன்னான். “பாத்திமா சாந்தி”. “என்னது ...... என்ன ....... பேரு?” “சாந்தி ........... பாத்திமா சாந்தி”. “சாந்தி...? தமிழ் பேரு மாதிரியிருக்கே”. “அதெப்படி தமிழ் பேராகும்?” “தமிலாக்கள் வைக்கிற பேருலா இது? என்ட புள்ள தமிழிச்சியா?” “நாமென்ன அறபா கதய்க்கம் அறபுல பேரு வைக்க?” “முஸ்லிம் பெயரைப் பார்த்து வைக்கிறான. முஸ்லிம் பேரு பாருங்க”. “முஸ்லிமாக்கள் அறபுலயா கதய்க்காஹ?” “பேக் கத கதயாம மௌலவிக்கிட்ட போயி நெல்ல வடிவான இன்ஷா அல்லாஹ் பக்கம் இல்லாத பேரா அஞ்சாறு எழுதிட்டு வாங்க. அதுல நானொரு பேரு ‘செலக்ட்’ பண்ணுவன். அவன் கறுத்த மௌலவிட்டப் போங்க. பொம்புளப் பேரு கொள்ளயா சொல்லுவான்.” “புள்ளட வாப்பா நானா? கறுத்த மௌலவியா?” “இதென்ன மடத்தனமாச் சொல்றீங்க? மாஸ்டரா நீங்க? புள்ளக்கி அழகான பேர்கள வைய்ங்கண்டு ஹதீஸ் இரிக்கீ”. “அறபு பேர்கள் வைய்ங்கண்டு ஹதீஸ் இரிக்கா?” “இதென்ன கூத்து? இந்தப் பேரு வைக்க நா ஒத்துக்கமாட்டன். சாந்தியாம். பேரப் பாரு. எப்பிடிச் சொல்லிக் கூப்பிடுறயித. தமிழச் ...........” “சாந்தி ண்டு தான் கூப்பிடுங்களன்.” “சீ ......... நான் உடமாட்டன்.”
பக்கம் 40 & 41:
இடையில் பிள்ளையைப் பார்க்க உறவினப் பெண்கள் வரவே விவாதம் ஓய்ந்தது. இவர்களிடம் இவள் இந்தப் பெயரைச் சொல்லிச் சொல்லியே மாய்ந்தாள். ஸல்ஹாட பிள்ளக்கி இந்தப் பெயர். பாத்திமா பிள்ளக்கி இந்தப் பெயர். ........... வம்பளப்புகள் .... விவரிப்புகள். வர்ணனைகள் ...... ஆளாளுக்குப் புத்திசொல்லிச் சொல்லி ....... இவன் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்து விட்டான்.
இவளை எப்படிச் சமாளிப்பது? சாந்தி என்ற பெயரில் என்ன குறைபாடு? பிழை எங்கேயோ இருக்கிறது. இஸ்லாம் என்றாலே சாந்தி மார்க்கம் தானே. .... சாந்தி மார்க்கம் என்ற இஸ்லாமிய பாடநூலே இருக்கிறதே. குர்ஆனுக்கு திருக்குர்ஆன் என்கின்றோமே. திரு என்றால் என்ன? தமிழ்தானே. ஜனாப் குர்ஆன் எனக்குறுகின்றோமா. திருக் குர்ஆனை ஏற்றுக் கொள்வார்கள். திரு சலீம் என்றால் சிரிப்பார்கள். ஏளனம். ஜனாப் சலீம் என்றால் சரியாம். ம்ஹ். பிழை எங்கோ இருக்கின்றது.
சாந்தியைக் கைவிட்டுப்போவதில்லை. பார்ப்போம். எப்படியும் ஒத்துக்கச் செய்ய வேண்டும். பள்ளியடிக் கடையில் ஒரு தேநீர் அருந்திவிட்டு நிமிர்ந்தபோது எதிரே கறுத்த மௌலவி. மனைவியின் ஆதர்ஷ சொர்க்கவாதி. பெயர்களைக் கேளேன் அவரிடம். அறபியில் புகுந்து முத்தெடுப்பார்.
“என்ன மாஸ்டர்? பாயிஷாவுக்கு பிள்ளை பொறந்திருக்காப்பல” என்றார் கறுத்த மௌலவி. பாயிஷா என்று பெயரைத்தான் உச்சரிப்பார். ‘உன் பெண்சாதி’ என்று கூறவே மாட்டார். சுயநல வேட்கை. மௌலவியை ஒரு புன்சிரிப்புடன் புறக்கணித்தான். முழுவதுமாக தேநீர் அருந்தி முடிந்தபின் வீடு வந்தான். மனைவி பிள்ளைக்குப் பால்கொடுத்துக் கொண்டிருந்தாள்.
“இவளுக்கு வஹ்று பெரிசி. அவ்வளவு பால் குடிக்காள்” என்று பிள்ளையைப் பெருமிதப்பட்டாள். இவனது கைகளில் தந்தாள். சுருள் முடி. வெள்ளையும் ரோசும் கலந்த நிறம். குங்குமப் பாதங்கள். சாந்தி?
“தாய்ப்பால் மட்டும் காணாதாம். எஸ்.எம்.ஏயும் குடுக்கணுமாம்”. “வந்த ஆட்களின் உபதேசமா?” “பேரு ..........? யோசிச்சிங்களா ....... மௌலவிக்கிட்ட போனயா?” “ல்ல. மௌலவி ஊட்ல ல்ல”. “நல்லதாப் போச்சி. ஏனென்டா நான் பேரு எடுத்திட்டன்”.
உறைக்குள்ளிருந்த விவாத வாளை உருவி விட்டாள். கவனமாப் போரிட வேண்டும். பாதுகாப்புக் கேடயம் ஒன்று வேண்டும். “கேளுங்களன் என்ன பேரு எண்டு” - முதல் வீச்சு. “என்ன பேரு? - கேடயம் உடன் வேண்டும். சாதுரிய விலகல். “பாத்திமா தௌஷ்பா, நல்லாரிக்கா?” - நேரடி வாள் வீச்சு. இதயத்தருகே வாள் நுனி. பிழைக்க முடியுமா? “என்ன நல்லதா பாத்திமா தௌஷ்பா?” “முஸ்லிம் பேரா?” “வேறென்ன?” “ம்ஹ் .....” “நீங்கென்ன? ..... அதானா? ..... சாந்திதானா?” “பாத்திமா கொன்வென்ட் ண்டு கிறிஸ்தவ பள்ளி யிருக்கே!” என்று ஒரு கேடயத்தை எடுத்தான். “ல்ல .... அது பற்றிமா கொன்வென்ட். இது பாத்திமா தௌஷ்பா”. “ரெண்டும் ஒண்டுதானே. இங்கிலீசல எழுதினா .......” “பதிவு வெய்க்ற தமுள்தானே. பாத்திமா தௌஷ்பா”. “தமுள்ல ஏன் எழுதணும்?” - போர் முறை மாற்றியது. மாற்றினான். “என்ன கேள்வி யீன நீங்க கேக்ற? நாம தமுள்தானே எழுதற ..... பேசற ..... படிக்க ....... தோம்புதோரும் தமுள்தானே பதிவு வெப்பான்”.
பக்கம் 42 & 43:
“அப்படீண்டா தமுள்ல சாந்தி ண்டு பேரு வெச்சா என்ன?” மனைவியின் வாளைத் தட்டிவிட்டான். நிராயுதபாணியாக வெறுத்தாள். ஆனால் வாழ்வின் சளைக்காத போராளி. இனி துவந்த யுத்தம் தான். “அந்தப் பேர் வைக்க கடைசி மட்டும் ஒத்துக்க மாட்டன். புள்ளக்கி பாலும் குடுக்கமாட்டன்”. - அடிபட்ட புலியாய் போய்ப் படுத்துக் கொண்டாள். இவனுக்கு நெடுநேரமாய் நித்திரை வரவில்லை. ம்...... சாந்தி கிடைக்க வில்லை.
அன்று பாடசாலையில் தினவரவு இடாப்பில் பிள்ளைகளின் பெயர்களைக் கூப்பிட்டான். “ஹினாயா ..... உம்முகுல்தூம் ..... நூர்ஜஹான் ..... பைரோசா ...... நிஹாரா ...... அப்பப்பா எத்தனை பெயர்கள் சாந்தி என்று மட்டும் இல்லை. மனம் சாந்தி சாந்தி என்று அடித்துக் கொண்டது. படிப்பிக்க நாட்டமில்லை. அரைநாள் விடுகையில் வீடு திரும்பி விட்டான்.
“காலத்தால ஒங்க வாப்பா வந்திருந்தாஹ. ஒங்கள ஊட்ட வரட்டாம்”. சரியாய்ப் போச்சு. வாப்பாவிடமும் சொல்லியிருக்கிறாள். இருக்கின்ற எதிரியோடு புது எதிரியா? வாப்பா சாந்தியை அங்கீகரிப்பாரா?
“ஞ்சப் பாருங்க. சாப்புட்டுட்டுப் போயி வாப்பாவயும் பாத்துட்டு விதானயிட்டப் போயி பதிவு வெய்க்ற போம் ஒண்டும் வாங்கிட்டு வாங்க”. பேசாமல் சாப்பிட்டான். பின் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியேறும்போது மறுபடி, “ஞ்சப்பாருங்க. போம அங்க வெச்சி எழுதிக்குடுக்காம ஞ்ச எடுத்திக்கிட்டு வாங்க”.
பிள்ளையின் பெயர் என்ற கூட்டினுள் சாந்தி என்று எழுதி விடுவான் என்று பயம். தாய் வீட்டுக்குப் போனான். முன்விறாந்தையில் வாப்பா பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். இவனைக் கண்டதும் புன்னகை காட்டினார். “என்ன பிள்ளக்கி பேரு வெச்சிட்டியா?” - நேரடி மோதலா? “ல்ல வாப்பா”. “என்னியோ தமுள் பேரு வைக்கப் போறியாமே மெய்யா?” “தமுள் பேரென்டா என்ன வாப்பா?”
இந்தக் கேள்வியை இவன் கேட்டதும் உடனே விரோதமானார். புன்னகையை கழற்றி விட்டார். “சிவசக்தி ண்டு பேரு வைக்கப்போறியாமே”. “ச்சே ..... ஆரு சொன்ன. சாந்தி ண்டு தான் ...... ஏன் நல்லா இல்லியா? சாந்தி .... பாத்திமா சாந்தி”. “என்ன சாந்தியா?” இவனைப் பரிதாபமாகப் பார்த்தார். தொடர்ந்து, “ஸ்கூல் ரெஜிஸ்டர்ல நல்ல பேரெல்லாம் இரிக்கீமே அதுல ஒண்டப்பாத்து வையுயன். ஸலாமான பேராப் பாத்து”. “ஸலாமான பேரென்டா என்ன வாப்பா?” “அது எனக்கித் தெரியா” - தெரியும் சொல்லமாட்டார். “அஸ்ஸலாமு அலைக்கும் ண்டால் சாந்தியும் சமாதானமும் ண்டுதானே கருத்து. ஸலாமா ண்டால் முஸ்லிம் பேரு. அத தமுளல ட்ரான்ஸ்லேசன் பண்ணினா சாந்திதானே வாப்பா?” “நீ பாரதியார் கவிதயள உழுந்துழுந்து படிக்கக்களயே எனக்கித் தெரியும் இப்பிடி என்னத்தயும் கதப்பாய் ண்டு”. “அதுக்கும் இதுக்கும் ஒரு சம்மந்தமும் ல்ல வாப்பா”. “அது எனக்கித் தெரியா. பேரு வெய்க்ற ண்டா நல்லா முஸ்லிம் பேரா பார்த்து வெய். ஒன் பெண்சாதி சொன்ன பேரு நல்ல பேரு. இல்லாட்டி வாப்பாம்மாட் பேர் வெய். இல்லாட்டி பொதன் கெழம பொறந்ததால ஆசியா ண்டு வெய்”.
இவர்கள் அனைவரும் ஒரே கட்சி. மத புரோகிதர்கள் தம் வசதிகளுக்காகச் சொல்லிவைத்த எதனையும் இம்மியும் பிசகாது பின்பற்றும் பின்பற்றல் வாதிகள். ஒருவனுக்கு ஒருத்தி என்ற இந்துமதக் கொள்கையைப் பின்பற்றி ஒரு பெண்ணை மட்டும் திருமணமிப்பார்கள். இஸ்லாம் கூறும் பலதார மணத்தை எக்காரணம் கொண்டும் பின்பற்றமாட்டார்கள். கௌரவக் குறைவாம். திருநபி என்று...
பக்கம் 44 & 45:
எழுதுவார்கள்; பேசுவார்கள். ஜனாப் நபி என்று இல்லை. எது இஸ்லாம்? பிழை இஸ்லாத்திலா? இவர்களின் மனங்களிலா? தினசரி, வார, மாத இதழ்கள் வாசிக்கிற வாப்பாவுக்கே இது புரியவில்லை. புதுமைச் சனங்கள். ஒன்றும் பேசாமல் வாப்பா விட்டுப்போன பேப்பரை எடுத்துப் பார்த்தான்.
“அந்தப் பேப்பர்ல மூலைல கெடக்கற பொறந்தநாள் விளம்பரத்தப் பாரு. பொம்புளப்புள்ள. பேரப் பாரு உம்மு மைமூனா. இதுவும் நல்ல பேருதானே”. “மைமூனாவா ...? இதுர கருத்தென்ன?” “கருத்து ....? மௌலவிக்கிட்ட கேளு பேர வெய்”. “மைமூன் என்றால் கருமை ண்டு அர்த்தம் மப்பா. நல்லா யிரிக்கிமா?” “ஒனக்கு அறபு தெரியா. அவரு கறுத்த மௌலவிக்கிட்ட கேளு”. தோல்வியை ஒப்புக் கொள்ளாத வீம்பு. பேப்பரைப் போட்டுவிட்டு எழுந்தான். வெளியே வந்தான்.
“அவசரப்படாம நல்ல பேராப் பாத்து வெய்”. - முதுகில் வார்த்தைகள் பட்டுத் தெறித்தன. காது கேளாதவன் போல வந்துவிட்டான் மௌலவியிடம் போகாமல் மறுபடி சைக்கிளை மிதித்து வீடு வந்தான். வீட்டில் பெண்கள் கூட்டம். பிள்ளை பார்க்க வந்தவர்கள் என்ற போர்வையில் தம்மைக் காண்பித்துக் கொள்ள வந்தவர்கள். மனைவியும் மதினியும் கேக், கல்கண்டு, டோபி, றிங்ஸ் என்று உபசரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் உபதேசித்துக் கொண்டிருந்தனர்.
மனைவியின் மாமியான நடுத்தர வயது விதவை வாய் நிறைய புகையிலையுடன் இவனைக் கண்டதும் சிரித்து முன்வந்தாள். “தம்பி ..... தம்பி. அடுத்த புள்ள ஆம்புள”. பேசாமல் புன்னகை காட்டிவிட்டு உள்ளே போனான். “தம்பி .......” மறுபடி மாமி. கடைவாயில் பாய்ந்த வெற்றிலைச் சாற்றை முந்தானையால் ஆகுயை இன்றி துடைத்தாள். “புள்ள ஒங்களப் போலான் வடிவு. பேரு வெச்சிட்டிங்களாமே. நல்ல பேர்தான் தௌஷ்பா. ம்ஹ் ..... நல்லம்”. “என்னம் பேரு வைக்கல்ல மாமி”. “ஞா ..... வெச்சிட்டிங்க. பேர ஒழிக்காதிங்க. தௌஷ்பா சூப்பர் பேரு”. - இது மனைவியின் தந்திரம். “பேர் என்னம் வைக்கல்ல மாமி”. “வெய்க்காட்டி நா ஒரு பேரு சொல்லட்டா மபீ?” இவளுக்கு மூளை இப்படிப் பேசவராது. இவள் அம்பு ஏவப்பட்டவள். மனைவியின் தந்திர அஸ்திரம். விதவைப் பட்டம் தந்த மேலதிக தைரியம். “சொல்லுங்க யோசிப்பம்”. “ரோசிக்கத் தேவெல்லம்பீ. நிபாஷா ண்டு வையுங்க”. “என்ன ...............து?” “பாத்துமா நிபாஷா. நல்லா ல்லியா மபீ?”
அறபியில் நிபாஸ் என்றால் பிரசவத்தின் போது பெண்களுக்கு உண்டாகும் அசுத்தம். மாமிக்குச் சொல்ல முடியவில்லை. “தம்பி. சரியா? நிபாஷாவா? தௌஷ்பாவா?” “ஏன் மாமி அவசிரம். பொறவு சொல்றனே பேரு”. உடனடியாக அங்கிருந்து தப்பிக்க வேண்டும். இனிப் பொறுப்பதற்கில்லை. மனைவி உள்ளே வந்தாள். “தேத்தண்ணி தரவா ஒங்களுக்கும். மாமி போய் தேத்தண்ணி எடுத்து வாங்க”.
மாமி பிள்ளையின் தொட்டிலருகே போய் முகத்தை அஷ்டகோணலாக்கி “ஞுய்யி ...... ஞுய்யி ........ ஞுய்யி .......” என்று ஏதோ சொல்லி நிபாஷாக் குட்டி ....” என்று கத்தி விட்டுச் சென்றாள். மனைவி இவனைத் தீர்க்கமாகப் பார்த்தாள். “பதிவு வெச்சிட்டிங்களா?” “ல்ல”.
பக்கம் 48 (இறுதிப் பக்கம்):
“சரி தம்பி. நீங்க போங்க. தோம்புதோருக்கிட்ட அனுப்பீரன். அவன் வலிசல். காசிக்கீ கேப்பான் மாஸ்டர்”.
வீடு வந்த போது அமைதி நிலவியது. உறவினர் எவரும் இல்லை. மனைவி மட்டும் தான் இருந்தாள். இவனைக் கண்டதும் ஆர்வமானாள். உடனே அறைக்குள் கூப்பிட்டாள்.
“என்ன சரியா? பதிவு வெச்சிட்டிங்களா?” “வெச்சிட்டன்”. “தௌஷ்பா தானே?” “பிள்ளை எங்க பால் குடிச்சிட்டா?” “ஓம். அன்னா தொட்டிலுக்க படுக்கிது தௌஷீக் குட்டி”. தொட்டிலுக்குள் பார்த்தான். குங்கும நிற பாதங்கள் தெரிந்தன. நல்ல நித்திரை. முகம் சாந்தியாக இருந்தது. திடீரென புன்முறுவல் காட்டியது.
“பாருங்களன். மலக்குகள் பூ குடுக்காஹ. சிரிக்கா. தல முடி உங்களப் போலயே தான் தௌஷீக் குட்டி”. பின் இவனை காதலோடு பார்த்தாள். “நீங்க சொன்ன பேர நான் ஒத்துக்கல்லண்டு கோவமா உங்களுக்கு?” என்று கேட்டு இவனை அணைத்தாள். குளிரும் வெப்பமுமான சமாளிப்பு.
“நீங்க என்னது? சாந்தி ண்டு கூப்புடுங்க. நான் தௌஷீ ண்டு கூப்புடுறன். ஆனா பதிவுல தௌஷ்பா தான் சரியா”.
இவனை இறுக்கி முத்தமிட்டாள். இவன் எங்கோ பார்த்துக் கொண்டு “சரி” என்றான்.
எதிர்காலத்தில் பிள்ளைகளிடத்தே ‘தமிழச்சி’ எனும் பட்டப் பெயரால் அழைக்கப்படப் போகின்ற சாந்தி அமைதியுடன் துயில்கொண்டிருந்தது.
“ஓம் ...... சாந்தி”
நன்றி: சிரிபாலபுர மாத்தையா 1990 மே 1
No comments:
Post a Comment